கோடை விடுமுறை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிட்டும்

03 Fév 2021

பிரான்ஸில் எதிர்வரும் ஜுலை – ஓகஸ்ட் கோடை விடுமுறைக் காலத்துக்குள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் உறுதி அளித்துள்ளார்.பிரான்ஸில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நான்கு நிலையங்கள் இந்த மாத இறுதியில் இயங்க ஆரம்பிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

TF1 மற்றும் LCI தொலைக்காட்சி சேவையின் கேள்வி நிகழ்ச்சி ஒன்றில் நேற்றிரவு கலந்துகொண்ட அதிபர் மக்ரோன், திட்டமிட்டவாறு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

« எங்களது தடுப்பூசி உத்தி மட்டும் பொது முடக்கம் ஒன்றைத் தவிர்த்து விடாது.அது சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் தொடர்புபட்டது » என்றும் மக்ரோன் குறிப்பிட்டார். வைரஸ் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகின்ற நிலையிலும் நாட்டு மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்ட காரணத்தால் தடுப்பு நடவடிக்கைகளில் ஏனைய நாடுகளை விட நாம் முன்னேற முடிந்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ரஷ்யத் தயாரிப்பான ‘ஸ்புட்னிக்’ (Sputnik) தடுப்பூசி பிரான்ஸில் பாவனைக்கு வருமா எனக் கேட்கப்பட்டபோது -« ஸ்புட்னிக் தயாரிப்பாளர்கள் அதற்கான சந்தைப்படுத்தல் அனுமதியைச் சமர்ப்பிக்கும் வரை பிரான்ஸில் அதனை நாங்கள் விநியோகிக்க முடியாது » – என்று மக்ரோன் பதிலளித்தார்.சந்தைப்படுத்தல் அனுமதியைச் சமர்ப்பித்தால் அதனை எமது அறிவியல் நிபுணர்கள் பரிசீலித்த முடிவுகளை எடுப்பர். அது விஞ்ஞான ரீதியாக முடிவு எடுக்கும் ஒரு விவகாரமே தவிர அரசியல் முடிவு அல்ல – என்றவாறும் மக்ரோன் பதில் வழங்கினார்.

வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் விநியோக இழுபறிகள் காரணமாக பிரான்ஸ் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தடுப்பூசித் திட்டங்கள் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன.இந்த நிலைமையிலேயே தடுப்பு மருந்து தொடர்பான மக்ரோனின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.இதேவேளை -தொற்று நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்காக சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் இன்று புதன்கிழமை எலிஸே மாளிகையில் நடைபெறவுள் ளது.

info : குமாரதாஸன். பாரிஸ்.03-02-2021

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW