உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் திரு. நடராஜா பாலசிங்கமது இறுதிவணக்க நிகழ்வு !

03 Mai 2021

தேச விடுதலையினை மூச்சாகவும், பொதுத் தொண்டினை வாழ்வாகவும் வரித்துக் கொண்ட நாட்டுப்பற்றாளர் திரு.நடராஜா பாலசிங்கம் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

சமூக-அரசியல் அமைப்பு பிரதிநிதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்களது இறுதிவணக்கத்துடன் அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது.

30 ஆண்டுகளுக்கு மேலாக தேசத்துக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் அயராது உழைத்த அன்னாரது பொதுவாழ்வை மதிப்பளிக்கும் வகையில், ‘நாட்டுப்பற்றாளர்’ என மாண்பினை தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கியிருந்தனர்.

அன்னாரது பேழைக்கு ‘தமிழீழத் தேசியக் கொடி’ போர்த்தப்பட்டு தேசியமரியாதையுடன் அன்னாருக்கான இறுதிவணக்க நிகழ்வினை தேசிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக முன்னாள் பொறுப்பாளர் திரு.வேலுமயிலும் மனோகாரன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து இறுதிவணக்க நிகழ்வினை தொடக்கி வைத்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆளனிவெற்றிடம் ஏதும் இல்லாத அளவுக்கு செயற்திறன் நிறைந்த பன்முகஆளுமைகளில் ஒருவராக அமரர் நடராஜா பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டிருந்தார் என தனது வணக்க உரியினை வழங்கிய வேலுமயிலும் மனோகாரன் அவர்கள், தாயக மக்களது மீள்வாழ்வுக்கான அன்னாரது பணியினை அனைவரும் தொடர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தமிழீழ விடுதலையினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கு நிலையில் அணுகும் நிலையில், ‘மானிட சமூகத்தை நேசித்த மனிதநேயத்தோடு’ தமிழீழ விடுதலையினை அணுகிய பெருமகனார் அமரர் நடராஜா பாலசிங்கம் அவர்கள் என தமிழீழ விடுதலை மூத்த செயற்பாட்டாளர் திரு.இளங்கோ தனதுரையில் தெரிவித்திருந்தார்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் ஓர் பெரும் தொண்டனை இழந்து நிற்பதாக தெரிவித்திருந்த அதன் தலைவர் திரு.கோணேஸ் அவர்கள், அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவரோடு செயலாற்றிய தோழர்கள், விளையாட்டுக்கழகங்கள், பொதுஅமைப்புக்கள் என பலரும் அன்னாரது நினைவுக்குறிப்புக்களை பகிர்ந்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது இரங்கல் செய்தியினை விளையாட்டு, உடல்நலத்துறை துணை அமைச்சர் கலையழகன் அவர்கள் வாசித்திருந்தார்.

வி.உருத்திரகுமாரனது இரங்கல் செய்தி :

தேசத்தை நேசித்த ஓர் பொதுச்சேவகனை
இழந்து நிற்கின்றோம்

தேச விடுதலையினை மூச்சாகவும், பொதுத் தொண்டினை வாழ்வாகவும் வரித்துக் கொண்ட திரு. நடராஜா பாலசிங்கம் அவர்களது மறைவு, எம்மை பெரும் துயரிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.அவருக்கான மரியாதை வணக்கத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொள்கின்றது.

பிரான்ஸ் தமிழ்ச்சமூகபரப்பின் அசைவியக்கத்தில் ‘பாலாவின்’ பங்கு என்பது அளப்பரியது,
அளவிடமுடியாதது. விடுதலைச் செயற்பாட்டுத்தளத்தில் தன்னை ஒரு தொண்டனாகவே எப்போதும் அடையாளப்படுத்தும் அவர், கொடுக்கப்படுகின்ற பணிகளை செவ்வன செய்து முடிப்பவர்.

பொறுப்புக்களையோ, பதவிகளையோ எதனையும் எந்தபிரதிபலனையும் எதிர்பாராதவர். இனத்திற்கான பலாபலன்களையே எதிர்பார்த்து தொண்டாற்றி இருந்தவர்.

விளையாட்டுக் களங்களாகட்டும், விடுதலை எழுச்சி நிகழ்வுகளாகட்டும், கவனயீர்ப்பு போராட்டங் களாகட்டும், சமூக பொது நிகழ்வுகளாகட்டும் ‘பாலா’வைக் காணாத நிகழ்வுகள் கிடையாது. அத்தனை நிகழ்வுகளிலும் ஏதோவொரு முளையில் தொண்டனாக ஒரு பணியினை ஆற்றிக் கொண்டிருப்பார்.

பொதுவாழ்வு என்பது அர்ப்பணிப்பு நிறைந்தது. தாயுள்ளம் கொண்டது. பொதுப்பண்புகள் நிறைந்தது. தமிழ்ப்பொதுப்பரப்பில் பொதுவாழ்விற்கு இலக்கணமாக முன்னுதாரனமாக அமரர் திகழ்ந்திருந்தவர் என்று சொன்னால் மிகையாகாது. எல்லோரோடும் அன்பாகவும் பண்பாகவும் பேசுகின்ற அவரது பாங்கு பலரையும் அவரின்பால் கட்டிப்போட்ட ஒன்று.

இன்று அவரை நாம் இழந்து நிற்கின்றோம். ஓர் பொதுச்சேவகனை இழந்து நிற்கின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது உறுதுணையாளர் ஒருவரை இழந்து நிற்கின்றோம்.

பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கும், அதன் பிரச்சாரங்களுக்கும் பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருந்தவேளை, தன்னை ஒரு முன்கள செயற்பாட்டாளனாக மக்களுக்குள் ‘தமிழீழ அரசாங்கத்தினை’ எடுத்துச் சென்ற பெருமகன் இவர்.

2009ம் ஆண்டு தமிழினவழிப்பின் துயரோடு, அதற்கான நீதிக்கும் இழந்த அரசியல் இறைமைக்குமாக நாம் போராட தொடங்கிய வேளை, தாயகமக்களின் வாழ்வாதாரத்தை நினைந்துருகி முன்னையெடுத்தவர் பாலா. மக்களின் வாழ்வாதாரதுக்கு ஓர் தனிமனிதனாக தாயகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த மக்களுக்கான உதவிகளை சிறுகப்பெருக செய்தவர். தனது மறைவு வரையும் செய்து கொண்டிருந்தவர்.
இன்று அன்னாரை இழந்து நிற்கும் நாம், பெருமகனாரின் பணிகளை தொடர வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவரது விடுதலைக்கனவினை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அன்னாரின் இழப்பினால் பெருந்துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அனைவரது கரங்களையும் இறுகப்பற்றிக் அவருக்கான மரியாதை வணக்கத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செலுத்திக் கொள்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் தலைவிதி தமிழர் கையில்

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW